

நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 6 நடைமேடைகளுடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.
இதன் அருகே கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு என தனித்தனி காப்பகங்கள் கட்டப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டப்பட்ட பல அடுக்கு வாகன காப்பகம் திறக்கப்பட்டது.
எனினும் புதிய பஸ் நிலையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிளிலேயே வருவார்கள் என்பதால் நான்கு சக்கர வாகன காப்பகத்தில் தற்காலிகமாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
இதன் அருகிலேயே மோட்டார் சைக்கிளுக்கு என வாகன காப்பகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி முழுமை பெற்ற பின்னர் மோட்டார் சைக்கிள்கள் அந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள பல அடுக்கு வாகன காப்பகத்தில் தரைத்தளம் மற்றும் அதன் கீழ் உள்ள தளத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணி நிமித்தமாகவும், வேறு காரணங்களுக்காகவும் செல்கின்றனர்.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தினமும் காலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணியை முடித்து இரவு மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது வாகனங்களில் பெட்ரோல் அளவு குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த வாகன காப்பகத்தில் ஒரு சி.சி.டி.வி. காமிரா கூட வைக்கப்படவில்லை என்பது வாகன ஓட்டிகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இங்கு சைக்கிளுக்கு ரூ.10, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.20, ஆட்டோக்களுக்கு ரூ.25 மற்றும் கார்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் காமிரா பொருத்துவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. சி.சி.டி.வி பொருத்துவதன் மூலம் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் திருடும் நபர்களை கண்டறிய முடியும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.