களக்காட்டில் விதவை பெண் மீது தாக்குதல்- முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது வழக்கு

களக்காட்டில் விதவை பெண்ணை தாக்கியதாக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பெண்
தாக்குதலுக்குள்ளான பெண்
Published on

களக்காடு:

களக்காடு நகரத்தெருவை சேர்ந்தவர் மேகலா (வயது 60). இவரது கணவர் சுதாகர் கடந்த 2009-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். இதுபோல அவரது மகனும் கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து மேகலா தனியாக வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நிலங்கள் சிதம்பரபுரத்தில் உள்ளது. 

இந்த நிலங்களை சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து, அவரிட மிருந்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாக மேகலா புகார் தெரிவித்து வருகின்றார். 

இதுதொடர்பாக அவர் நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை எஸ்.பி, சேரன்மகாதேவி உதவி கலெக்டர் மற்றும் பத்திர பதிவு துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளார். 

மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.  

அதன் பின் கடந்த 21ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண் எண்ணை கேனுடன் சென்றார். இதைப்பார்த்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். 

இந்நிலையில் மேகலா நேற்று மாலை களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது களக்காடு கோவில்பத்தை சேர்ந்த களக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்து கிருஷ்ணனுக்கும், மேகலா விற்கும் தகராறு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன், மேகலாவை அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. 

இதில் காயம் அடைந்த மேகலா 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் முத்துகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com