மேலாத்தூர் ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
ஆத்தூர்:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மேலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மேலாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள அடர்ந்த காடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அவற்றை பராமரிப்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மேலாத்தூரில் செயல்பட்டு வரும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை, கழிப்பறை, சத்துணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடப்பட்டது.
இப்பள்ளியில் சுற்றுசுவர் அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சுமதி, கிரியேடிவ் பீ பயிற்சியாளர் ரமணாதேவி, பணித்தள பொறுப்பாளர் சுதா, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆத்தூர் முத்துலட்சுமி, சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

