

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பஞ்சாயாத்து ராஜ் தினத்தினை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விவாதிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், எம்.செல்வராஜ் எம்.பி, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மக்களும் அவர்களின் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக விவாதித்து ஒரு தீர்வினை எட்டுகின்ற நிலையினை உருவாக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடைகிற வகையில் அமைந்துள்ளன.
அந்த வகையில் மருத்துவம சார்ந்த திட்டங்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பயனளிக்கிற வகையில் அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசகை கூட்டத்தில் கிராமவளர்ச்சி குறித்தும், தேவையான திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கையாக அனுப்பப்படுகிறது.
கூட்டப்பொருளாக கிராம வளர்ச்சி, சுகாதாரம், தரமான குடிநீர், முறையான நீர் மேலாண்மை, மாற்று எரிசக்தியினை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல், சுற்றுப்புறசூழலை பாதுகாத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலிவான பாதுகாப்பான வீடுகள் வழங்குதல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சமூகபாதுகாப்பு திட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் சேர்த்தல், ஊராட்சிகளில் நல் ஆளுமையுடன் அனைத்து நலத்திட்டபணிகள் அனைத்து சேவைகளும் கிடைத்திட வழிவகைசெய்தல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், உள்ளிட்ட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இத்தீர்மானங்கள் தொடர்பாக ஊராட்சி பகுதி மக்களிடம் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை இக்கிராம சபை மூலம் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலைத்த வளர்ச்சி குறித்த உறுதிமொழி கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, திருவாரூர் ஒன்றியக்குழுத் தலைவர் புலிவலம் தேவா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.