search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது
    X

    151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது

    • இந்திய அரசின் மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.
    • மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    சேலம்:

    இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.சி) காலியாக உள்ள 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதனுடன் கனிமவளத்துறையில் 9 நிர்வாக அதிகாரி, டி.ஆர்.டி.ஓ. துறையில் 8 முதுநிலை நிர்வாக அதிகாரி, மீன்வளத்துறையில் 1 நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதியை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேர்வு நடைபெற உள்ளது. அன்று மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் பொதுத்திறன் அடிப்படையில் கேட்கப்படும். 'பகுதி - அ' பிரிவில் ஆங்கில அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் வேலை தொடர்பாகவும், 'பகுதி - ஆ' பிரிவில் மனித வள மேம்பாடு, மார்க்கெட்டிங் மேலாண்மை, அக்கவுண்ட்டிங் மற்றும் நிதி மேலாண்மை, தகவல் தொடர்பான சட்டம், பொது அறிவியல், கம்ப்யூட்டர் அறிவு உள்ளிட்டவை சம்பந்தமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.

    ஹால்டிக்கெட்

    முன்னதாக தேர்வர்கள் தேர்வு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். 2.20 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2.20 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் கேட் பூட்டப்படும். மின்னணு நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்ய வருகிற 17-ந்தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும் என தேர்வர்களை யூ.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×