search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை லாலா கடைகளில் புதுரக இனிப்பு, பலகார வகைகளுக்கு அமோக வரவேற்பு - ஆர்டர்கள் குவிவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
    X

    பாளை பெருமாள் மேலரத வீதியில் பலகாரங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களையும், விற்பனைக்கு தயாரான பலகாரங்களையும் படத்தில் காணலாம்.

    நெல்லை 'லாலா' கடைகளில் புதுரக இனிப்பு, பலகார வகைகளுக்கு அமோக வரவேற்பு - ஆர்டர்கள் குவிவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

    • நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன.
    • உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பலகாரங்கள் விற்பனை

    தீபாவளி என்றதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் தான். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து உடல் முழுவதும் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதில் குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசை.

    அதற்கு அடுத்தப்படியாக தீபாவளியில் இடம்பெறுவது பலகாரங்கள் தான். தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே, லாலா கடைகளுக்கு மவுசு கூடிவிடும். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள லாலா கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புது ரகங்கள்

    நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், பாரம்பரியம் வாய்ந்த நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் பல கடைகள் நூற்றாண்டுகளை கடந்து 4 தலைமுறையாக இனிப்பு பலகார விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கடைகளில் தற்போது மக்களை கவரும் வகையில் பல புது ரக இனிப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற புது இனிப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதாவது வழக்கமாக ஜாங்கிரி என்றாலே உளுந்து அரைத்து செய்வார்கள். ஆனால் இதில், உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அசத்தலான அல்வா

    மேலும் கேரட் அல்வா, பூசணி விதை அல்வா, பால் அல்வா என அல்வாக்களிலும் பல ரகங்களை நெல்லை கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு லாலா கடைகளில் இனிப்பு பலகாரங்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதேபோல் அதிரசம், சீடை, கை சுற்றல் முறுக்கு, ஆகிய மிகவும் சிறப்பு வாய்ந்த பலகாரங்கள் விற்பனையும் தொடங்கி உள்ளது. இந்த நவீன காலத்தில் பேக்கரி, டீ ஷாப், கபே என இனிப்பு பலகார கடைகளுக்கு பல புது பெயர்கள் சூட்டப்பட்டாலும் கூட பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் கடைகளுக்கு மவுசு குறையவில்லை.

    கை சுற்றல் முறுக்கு

    எந்திரமயமாகி போன இந்த காலத்தில், பெரும்பாலான ஊர்களில் எந்திரங்கள் மூலமாகவே முறுக்கு சுடுகின்றனர். ஆனால் பாளை பகுதிகளில், தற்போது வரை கை சுற்றல் முறுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கையால் சுற்றி போடப்படும் முறுக்கு, பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பெருமாள் மேலரதவீதியில் கை சுற்றல் முறுக்கு போடும் பணியில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கூட்டமாக அமர்ந்து இந்த முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வியாபாரி பேட்டி

    இதுகுறித்து பாளை பெருமாள் மேலரதவீதியில் உள்ள கடை உரிமையாளர் கூறியதாவது:-

    தீபாவளியை முன்னிட்டு முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் மொத்தமாக ஆர்டர் வந்து கொண்டிருக்கிறது. தல தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு, மணப்பெண்ணின் வீட்டார் இனிப்பு பலகாரங்கள் அதிக அளவில் வாங்கி சீர் கொடுப்பர். எனவே, இனிப்பு பலகாரம் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து பலகாரங்களுக்கும் தலா ரூ.1 விலை கூட்டியுள்ளோம். ஏனெனில் கடந்த ஆண்டு 25 கிலோ புழுங்கல் அரிசி ரூ.850 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது. கியாஸ் விலையும் அதிகமாகி விட்டது.

    ஆர்டர்கள் குவிகிறது

    இந்த தீபாவளிக்கு கை சுற்று முறுக்கு ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்கிறோம். அதிரசம் ரூ.6, தேன்குழல் முறுக்கு ரூ.7, அச்சு முறுக்கு, தட்டை ரூ.5, முந்திரி கொத்து ரூ.8, நெய் உருண்டை ரூ.7 என்ற விலையில் விற்பனை செய்கிறோம்.

    இதுதவிர வளைகாப்பு செய்யும் கர்ப்பிணி பெண்களுக்காக சீர் முறுக்கு தயார் செய்கிறோம். இது ஒரு முறுக்கு ரூ.200 என்ற விலையில் விற்கிறோம். ஒரு தாம்பூலம் அகலத்தில் இந்த முறுக்கு இருக்கும். வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பிணியின் மடியில் கட்டி இதனை அனுப்புவார்கள்.

    மற்ற முறுக்கு 100 எண்ணம் சுற்றுவதற்கு ஆகும் மாவின் அளவை கொண்டு 2 சீர் முறுக்கு செய்வோம். இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×