குழந்தைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்
குழந்தைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்

தஞ்சை மாவட்டத்தில் 2.38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தஞ்சை மாவட்டத்தில், இன்று 5 வயதிற்குட்பட்ட 2.38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

இந்தியாவில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கபடும். இதன்மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலில் இருந்து ஒழிக்கப்படுகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தியா முழுவதும் இன்று  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில்  5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரத்து 449 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 20 ஆயிரத்து 650 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

நகரப்பகுதிகளில் 128 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது. 

இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ், ரெயில் நிலையங்கள், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்று வருகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும்  சொட்டு மருந்து வழங்கலாம். எனவே நமது மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2 சொட்டு போலியோ சொட்டு மருந்தை தவறாமல் போட்டுக் கொண்டு போலியோ நோயிலிருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், துணை இயக்குனர் ரமேஷ்குமார் (சுகாதாரப்பணிகள்), நகர்நல அலுவலர் நமச்சிவாயம்  மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com