அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசாரத்தின் போது தி.மு.க. பெண் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசாரத்தின் போது 9-வது வார்டு தி.மு.க. பெண் வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அனுசியா
அனுசியா
Published on

தஞ்சாவூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரை சேர்ந்த மூர்த்தி  மனைவி அனுசியா (வயது 56) என்பவர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனுசியா இன்று காலையிலிருந்தே தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தார்.

வீடுவீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்தனர். ஆனால் அனுசியா இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அனுசியா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஐயப்பன் நெஞ்சுவலியால் இறந்தார். தற்போது தஞ்சை மாவட்டத்திலும் அதுபோன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com