கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள குவிந்த மாட்டு வண்டிகள் - தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

பொதுப்பணித் துறையில் இருந்து தகவல் வந்ததாக கூறி திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள குவிந்த மாட்டு வண்டிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் அள்ள குவிந்த மாட்டு வண்டிகள், மணல் அள்ள வழங்கப்பட்ட ரசீது.
மணல் அள்ள குவிந்த மாட்டு வண்டிகள், மணல் அள்ள வழங்கப்பட்ட ரசீது.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடி கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மணல் ஏற்றி செல்வதற்காக இறங்கின. அரசு மணல் குவாரி குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் ஏராளமான மாட்டு வண்டிகள் மணல் அள்ளுவதற்கு ஆற்றில் இறங்கியதை கண்ட கோவிலடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மணல் அள்ள வந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களுக்கு பொதுப்பணித் துறையில் இருந்து வந்த தகவலின் பேரில் தாங்கள் இங்கு வந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜா, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், பூதலூர் தாசில்தார் பிரேமா, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு விரைந்தனர்.

மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகாரர்கள், கோவிலடி கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கோவிலடி பகுதியில் மணல் குவாரி திறப்பது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றும், அறிவிப்பு வந்தாலும் மணலை எடுத்துச் சென்று வேறு இடத்தில் சேமித்து வைத்து அங்கிருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாட்டுவண்டி உரிமையாளர்கள் தாங்கள் நீண்ட தொலைவிலிருந்து வந்து விட்டதாகவும் தங்களுக்கு மணல் ஏற்றிச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி அளிப்பது, மற்றவர்களுக்குஅனுமதி இல்லை, முறையான அனுமதிக்கு பின்னர் மணல் குவாரி திறக்கப்பட்டு சேமிப்பு மையங்களில் மணல் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளுக்கு மணல் தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்று ஆன்லைனில் பதிவு செய்திருந்த 105 மாட்டு வண்டிகளுக்கு மணல் ஏற்றி அனுப்பப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் கோவிலடி கொள்ளிடம் ஆற்று பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முறையாக மணல் குவாரி திறப்பதற்குள் மாட்டு வண்டிகளை அழைப்பு விடுத்து ஆற்றுக்குள் இறங்கியது எப்படி என்பது குறித்தும், குவாரி திறக்காத நிலையில் ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி அனுப்பியது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும், காலையிலிருந்து மாட்டு வண்டி களில் ஏற்றிய மணலை இறக்கிவிட்டு செல்லுங்கள் என்று கூறிய அதிகாரிகள் மாலையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்று கொண்டு ரசீது வழங்கப்பட்டது எப்படி சாத்தியமானது என்றும், மாட்டுவண்டிகளை வரவழைத்து அலைக்கழிப்பு செய்ததற்கு யார் காரணம் என்பது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com