

தஞ்சாவூர்:
மழையால் மூழ்கி சேதமான நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தோட்டப் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மனித உயிர் இழப்பிற்கு ரூ.10 லட்சம் மற்றும் ஆடு, மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்.
பொங்கல் பரிசு பொருட்களில் தேங்காய்கள் மற்றும் இனாம் தொகை சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் திரண்டனர்.
இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு தஞ்சை மாநகர செயலாளர் முத்துக்குமார், தேசியக்குழு பன்னீர்செல்வம், மாநில குழு பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மகளிரணி மாலதி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட
5 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.