ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி

வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங்நகரில் ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.
கண்காட்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கண்காட்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

தமிழக அரசின் மரமான பனை சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் நகரில் அமைந்திருக்கும் பன்னாட்டு பெண்கள் கல்வி  பயிலும் பெண்களுக்கான ஆசிய பல்கலையில் ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. 

பனை சார் வாழ்வியலை மீட்டுருவாக்கம் மேம்பாடு செய்யும் வழியில் பனையாண்மை கருத்தியலை உருவாக்கி பரப்பி வரும் கடையத்தை சேர்ந்த பனை மற்றும் சூழலியல் அறிஞர் பேராசிரியர் பாமோ பெண்களுக்கான ஆசிய பல்கலையில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பயிற்சியின் நோக்கமானது  தற்சார்பு மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஆசியப்பனையின் பங்கு என்பதாகும்.

பல ஆசிய நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 140 பனை சார் உணவு மற்றும் உணவிலிப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பர்மா , தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, ஈஸ்ட் திமோர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பனை பற்றிய பல ஆய்வுகட்டுரைகளும் பதாகை விளக்க காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் ஆய்வு மாணவிகள் கிறிஸ்டின் மற்றும் பயசா  உருவாக்கிய    பனைவீரர் மற்றும் பனையாண்மை என்ற 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. பேராசிரியர் பாமோ மற்றும் ஆய்வு மாணவி  கிறிஸ்டின் ஆய்வுரையாற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 

அடி முதல் நுனி வரை பயன்படும் பனையின் எண்ணிக்கையும் பனை சார் வாழ்வியலான பனையாண்மை புரிவோர் எண்ணிக்கையும் பெருமளவில்  குறைந்து வருவது சுழலியலுக்கு உகந்ததல்ல. 

பனைமரம் பயன்மரம் , தனித்தன்மையான சுழற் தொகுதியாக விளங்கி பல நுண்ணுயிர்கள், தாவரங் கள், பறவைகள் ஊர்வன, விலங்குகக்கு உயிர் காற்று, உயிர்நீர், உணவு உறைவிடம் மருந்தாக விளங்குகிறது.

 சூழலியலைக் கெடுக்கும் வேதி பலபடிகளுக்கு மாற்று  சூழலியலுக்கு உகந்த பனையோலை நார் பொருட்களே. இதன் மூலம் சூழலியலுக்கு உகந்த பல தொழில்களை தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம்.  

அக்கறை என்ற பெயரில் தண்ணீர் விட்டு உரம் போட்டு மருந்தடித்து வளர்க்கப்படாத  பனைமரத்தின்  கலப்படமற்ற நேரடி பனை உணவுகளான பனம்பாலான கள், சுண்ணாம்பிட்ட பதநீர் (இதிலிருந்து உருவாக்கபடும் பனம்பாணி,கருப்பட்டி , கற்கண்டு), நுங்கு, பனம் பழம், தவுண், பனங்கிழங்கு குருத்து ஆகியன உடலை உறுதியாக்கும் நோய்களை தவிர்க்க உதவும் மருத்துவ பண்பும் ஊட்டமிக்கதுமான உணவாகும். 

இந்த பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை 19 நாடுகளைச் சேர்ந்த இளையோர்களிடம் பனை சார்ந்த வாழ்வியல் பொருளியல் சூழலியல் விழிப்புணர்வை உருவாக்கும் கருவியாகியுள்ளது என கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com