தாமிரபரணி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தோழிகளை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தோழிகளை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தோழிகளை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி
தோழிகளை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி
Published on

நெல்லை:

சென்னை போரூரை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் வினோத் ( வயது 24). இவர் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருடன் குரோம்பேட்டையை சேர்ந்த மருதுபாண்டி மகள் பாரதி ( வயது 24), வேளச்சேரியை சேர்ந்த மருதுபாண்டி மகள் மோனிகா ( வயது 22) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் வினோத் தனது அலுவலக தோழியான பாரதி, மோனிகா மற்றும் நண்பர்களுடன் நெல்லை ரஹ்மத் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.

இன்று அதிகாலை நண்பர்கள் 6 பேரும் நெல்லை அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க சென்றனர்.

அப்போது அவரது தோழிகளான பாரதி மற்றும் மோனிகா எதிர்பாராத விதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் தோழிகளை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய வினோத் ஆழமான பகுதிக்கு சென்று அவர்களை மீட்க முயன்றார்.

அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இவர்கள் ஆற்றில் தத்தளித்தப்படி இருந்ததை கண்ட அப்பகுதியில் குளிக்க சென்ற பொதுமக்கள் பார்த்து அவர்களை மீட்டனர்.

இதில் பாரதி மற்றும் மோனிகா ஆகியோர் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் வினோத் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com