திருப்பூர் மார்க்கெட்டில் கை-கால்களை கட்டிப்போட்டு வாலிபர் குத்திக்கொலை

தொழில் போட்டி அல்லது பணத்தகராறில் மர்மநபர்கள் வாலிபரை கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
சம்பவ இடத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் சாலையில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை மார்க்கெட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் கை- கால்கள் கட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடல்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனால் மர்மநபர்கள் அந்த வாலிபரின் கை-கால்களை கயிறால் கட்டிப்போட்டு கத்தியால் குத்திக்கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர்(வயது 30) என்பது தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். மோப்பநாய் வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து மோப்பபிடித்தவாறு சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

தொழில் போட்டி அல்லது பணத்தகராறில் மர்மநபர்கள் ஸ்ரீதரை கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்க்கெட் வளாகம் மற்றும் பல்லடம் சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொலையாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட உள்ளது.

திருப்பூர் மாநகரில் சமீபத்தில் அசாம் பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் திணித்து கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த வாரம் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் சதீஷ் என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் தலையை தனியாக துண்டித்து கொலை செய்தனர். இன்று மார்க்கெட் வளாகத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். தொடர் கொலை சம்பவம் திருப்பூர் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com