சோளிங்கர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனியை அடித்து கொன்ற வாலிபர்

அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.சஞ்சீவிராயன் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார்.
அடித்து கொல்லப்பட்ட கவுதமி
அடித்து கொல்லப்பட்ட கவுதமி
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி (வயது 32) இவருடைய கணவர் முனிசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் தனது மகன், மகளை காப்பாற்ற ராணிப்பேட்டையில் உள்ள ஷு கம்பெனியில் கவுதமி வேலை பார்த்து வந்தார்.

கவுதமியின் தங்கை பிரியா என்பவரின் கணவர் சஞ்சீவிராயன் (35) கூலித் தொழிலாளி. இவருக்கு கவுதமி மீது ஆசை ஏற்பட்டது. அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கவுதமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது குறித்து கவுதமி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் சஞ்சீவிராயனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று கவுதமி மற்றும் அதே ஊரை சேர்ந்த சுகன்யா, கோமளா 3 பேரும் வேலை முடிந்து தகரகுப்பம் பஸ் நிலையத்தில் இருந்து ஒட்டனேரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன் அங்கு வந்தார். அவர் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார். இதில் கவுதமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா, கோமளா இருவரும் ஊருக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். பொதுமக்கள் அங்கு வந்தபோது கொலை செய்த சஞ்சீவிராயன் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கவுதமியின் உறவினர்கள் சஞ்சீவிராயனை கைது செய்யாமல் பிணத்தை எடுக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அரக்கோணம் டி.எஸ்.பி. கிரேஸ் யாதவ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார்.

இதையடுத்து போலீசார் கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சஞ்சீவிராயனை போலீசார் தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com