கள்ளக்குறிச்சியில் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி

கள்ளக்குறிச்சியில் வாய் தகராறில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன். அவரது மகன் சந்திரசேகர் (வயது 28), இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருளந்தார்.

அப்போது அந்த வழியாக அதே பகுதியைச் சேர்ந்த சோலன் மகன் மணிகண்டன் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மணிகண்டனிடம் தானும் மோட்டார் சைக்கிளில்  வருவதாக கூறினார்.

அதற்கு அவர் பெரியவரை ஆபாசமாக திட்டி உள்ளார். அப்போது அங்கிருந்த சந்திரசேகர் ஏன் அவரை அசிங்கமாக திட்டுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் சந்திரசேகருக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மீண்டும் சற்று நேரத்தில் மணிகண்டன் அம்பேத்கர் சிலை அருகே வந்து அங்கிருந்த சந்திரசேகரை வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாய் தகராறில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com