மாஸ்டர் சினிமா பட பாணியில் திருப்பூரில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது

சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அம்சவரதனை பிடித்து விசாரணை நடத்தினர். அம்சவரதனை கைது செய்த போலீசார், அவரை அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மாஸ்டர் சினிமா பட பாணியில் திருப்பூரில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருப்பூர்:

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சிறுவர்களை வைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வருவார். சிறுவர்களுக்கு தண்டனை கிடையாது என்பதால் அவர் சிறுவர்களை வைத்து கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. இந்தப்படத்தை போன்ற சம்பவம் திருப்பூர் மாநகரில் அரங்கேறி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

திருப்பூர் வாவி பாளையத்தை அடுத்த வாரணாசி பாளையம், குருவாயூரப்பன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த சிறுவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் வாரணாசி பாளையம் பகுதியை சேர்ந்த அம்சவரதன் (வயது 23) என்ற நபர் கஞ்சா விற்பனை செய்வதுடன், சிறுவர்களை அம்சவரதன் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அம்சவரதனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், மேலும் அவர் 16 வயதுடைய 2 பேர் மற்றும் 17 வயதுடைய 3 பேர் உள்ளிட்ட 5 சிறுவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அம்சவரதனை கைது செய்த போலீசார், அவரை அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அம்சவரதன் மீது ஏற்கனவே பெருமாநல்லூர், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 5 சிறுவர்களையும் போலீசார் இளம்சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி சித்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த 5 பேரில் 2 சிறுவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையிலும், 3 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 30 நாட்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி சித்திக் உத்தரவு பிறப்பித்தார்.

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நீதிபதி நூதன தீர்ப்பு வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com