search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலையில் பரவி வரும் தீ விபத்து- மரங்கள், செடிகள் கருகியது
    X

    ஏற்காடு மலையில் பரவி வரும் தீ விபத்து- மரங்கள், செடிகள் கருகியது

    • ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்தது.
    • காட்டுத் தீ மளமளவென ஒவ்வொரு மரங்களாக பரவி எரிந்து வருகிறது

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர், அதாவது 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. இங்கு நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் உள்ளன. காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப்பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மேலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று மாலை ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்டுத் தீ மளமளவென ஒவ்வொரு மரங்களாக பரவி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள், கொடிகள் தீக்கிரையாகி உள்ளன. மேலும் வன உயிரினங்களும் தீயில் சிக்கி உயிரிழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தீபிடித்துள்ள இந்த பகுதி ஏற்காடு அடிவாரம் அருகாமையில் உள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு தீ தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக பரவி வருவதாலும், அந்த இடங்கள் செங்குத்தான பகுதியாக இருப்பதாலும் அங்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் , தீயை முழுமையாக கட்டுக்குள்கொண்டு வர முடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தீ பரவியுள்ள இடத்தை பார்வையிட்டு தீயை அணைக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.

    Next Story
    ×