search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் மறியல்
    X

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் 'திடீர்' மறியல்

    • பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கூனிபாளையம் காலனி. இங்கு சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 4 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் நீர்வற்றி விட்டதால் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியினருக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சீதஞ்சேரி -பெண்ணாலூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மற்றும் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரகு ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×