search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டறம்பள்ளி அருகே 6 பேரை கொன்ற காட்டு யானைகள்- கிராமத்தில் புகுந்து அட்டகாசம்
    X

    நாட்டறம்பள்ளி அருகே 6 பேரை கொன்ற காட்டு யானைகள்- கிராமத்தில் புகுந்து அட்டகாசம்

    • யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன.
    • கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் யானைகள் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்துக்குள் புகுந்தன. வீடுகளை சுற்றி சுற்றி வந்து அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.

    அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்தனர்.

    பொதுமக்கள் கூச்சலிட்டபடி வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன.

    அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள மகேஸ்வரன் என்ற நபரின் கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    காட்டு யானைகள் கடும் கோபத்துடன் ஆவேசமாக உள்ளன. பொதுமக்கள் அந்த இடங்களுக்கு செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

    கரும்பு தோட்டத்திற்குள் இருந்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×