எட்டயபுரம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கியதால் களை கட்டும் விற்பனை- கருப்பட்டி தயாரிக்கும் பணிகளும் தீவிரம்

இந்தாண்டுக்கான பதநீர்சீசன் கடந்த வாரம் தொடங்கி உள்ளது. பரவலாக மழை இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டை விட பதநீர்சீசன் அதிகம் என்று பனைத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டயபுரத்தில் பதநீர் அருந்தும் பொதுமக்கள்
எட்டயபுரத்தில் பதநீர் அருந்தும் பொதுமக்கள்
Published on

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி, அயன் வடமாலபுரம், அச்சன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன.

இதனை நம்பி ஏராளமான பனைத்தொழிலாளர்களும் உள்ளனர். பலர் மற்றவர்களின் நிலங்களில் உள்ள பனைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதியில் பதநீர்சீசன் தொடங்குவது வழக்கம். 6 மாதகாலம் பதநீர் சீசன் இருக்கும்.பனையில் இருந்து பதநீர், கருப்பட்டி ஆகியவற்றை பனைத்தொழிலாளர்கள் விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.

போதிய மழை இல்லை, வறட்சி காரணமாக கடந்த ஆண்டு பதநீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கருப்பட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டதால், குத்தகை கூட கொடுக்க முடியமால் பனை தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான பதநீர்சீசன் கடந்த வாரம் தொடங்கி உள்ளது. பரவலாக மழை இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டை விட பதநீர்சீசன் அதிகம் என்று பனைத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனைகளில் உள்ள பாளையில் பதநீர் அதிகளவு வடிய தொடங்கி உள்ளதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பதநீர்சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்ளில் விற்பனை அதிகரித்துள்ளது. பொது மக்களும், வியாபாரிகளும் பதநீர் வாங்குவதற்கு அதிகளவில் வருகிறார்கள். இந்தாண்டு சீசன் நன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் பதநீர் வரத்து அதிகரித்துள்ளதால் கருப்பட்டி தயாரிக்கும் பணிகளையும் பனைத்தொழிலாளர்கள் தொடங்கி உள்ளனர்.

கோடை காலமும் தொடங்கி உள்ளதால் பொதுமக்களும் பதநீர் அருந்த நாடிச் செல்வது பனைத்தொழிலாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தினை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக பனைத்தொழிலாளர்கள் கூறியதாவது:-

வறட்சி காரணமாக கடந்த ஆண்டு தொழில் பாதிக்கப்பட்டாலும், இந்தாண்டு சீசன் நல்ல முறையில் தொடங்கி உள்ளது. அதிகமான மக்கள் பதநீர் அருந்தவும், கருப்பட்டி வாங்கவும் வர தொடங்கி உள்ளனர்.

எங்களுக்கு 6 மாதம் தான் தொழில் இருக்கும். மற்ற 6 மாதங்களுக்கு வேலை இருக்காது. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்குவது போல எங்களுக்கும் அரசு உதவி தொகை வழங்க வேண்டும்.

மேலும் அரசு பனை தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். கருப்பட்டியில் போலிகள் அதிகரித்துள்ளதால், இதனை கண்டறிந்து ஒரிஜினல் கருப்பட்டிகளை ரேசன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com