search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி- விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
    X

    குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி- விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

    • ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • 28-ந்தேதி பகல் 12 மணிக்கு 8 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்தார்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உள்பட 9 பேர் மீது கெடார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது. ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். 28-ந்தேதி பகல் 12 மணிக்கு 8 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்தார்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோரின் படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கடலூர்,திருநெல்வேலி,கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இவர்களின் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உடள்பட 53 பேரை அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்து இருந்தார். இதில் ஜாபருல்லா உள்பட 11 பேர் மட்டும் மாயமாகி போனது தெரிய வந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பியில் உள்ள ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×