வாகன ஷோரூமில் பயங்கர தீவிபத்து- பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து நாசம்

வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தம் புது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சர்வீசுக்கு வாடிக்கையாளர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
வாகன ஷோரூம் தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
வாகன ஷோரூம் தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
Published on

கரூர்:

கரூர் கோவை சாலையில் பஜாஜ் கம்பெனியின் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் விற்பனைக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சர்வீஸ் ஸ்டேசனில் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. நேற்று இரவு வழக்கம்போல் பணியாளர்கள் இரவு 9.00 மணி அளவில் ஷோரூமை பூட்டிவிட்டு வீடு திரும்பினர்.

இந்த நிலையில் இரவு சுமார் 9.45 மணி அளவில் அந்த ஷோரூமின் சர்வீஸ் ஸ்டேசனில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நிலைய அலுவலர் விஜயகுமார் 2 வாகனங்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்களுடன் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதையடுத்து புகளூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் ஒரு பக்கம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் 2 தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன் விரைந்து வந்தார். பின்னர் அவரின் மேற்பார்வையில் தீயணைக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்தன.

இருப்பினும் எளிதில் தீப்பிடிக்க கூடிய ஆயில் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் சர்வீஸ் ஸ்டேசனில் பிடித்த தீ புதுமோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஷோரூமிலும் பரவியது. இந்த தீ விபத்தில் புத்தம் புது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சர்வீசுக்கு வாடிக்கையாளர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்துக்கு மின்கசிவு காரணமா? சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com