

வண்டலூர்:
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மாலை முதல் திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது வண்டலூர் பூங்காவில் இருந்து வெளியே வந்த வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும் அவர் யார் எந்தபகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.