search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்- பொதுமக்கள் கடும் அவதி
    X

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்- பொதுமக்கள் கடும் அவதி

    • நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.
    • குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.

    மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்த பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசியதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இது ஒரு புறம் இருக்க குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    நேற்று காலையில் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமள வென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் மாணவ- மாணவிகள் அனைவரும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் முழுமையாக அணைக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்கள். திங்கள் சந்தை கன்னியாகுமரி நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக 55 வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ ஒரு புறம் அணைக்கப்பட்டாலும் மறுபுறம் புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது.

    இதனால் இன்றும் அந்த பகுதி முழுவதும் தொடர்ந்து புகை மண்டலமாகவே இருந்து வருகிறது. புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களும் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள்.

    துர்நாற்றம் ஒருபுறம் இருக்க புகை மண்டலத்தால் தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது. 1-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

    வலம்புரிவிளை குப்பை கிடங்கை இன்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. நேரில் வந்து பார்வையிட்டார். மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் அய்யப்பன், ரமேஷ், வீர சூர பெருமாள் ஆகியோரும் உடன் சென்றனர்.

    Next Story
    ×