என் மலர்
உள்ளூர் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆப்சென்ட்
- திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் உயர் பதவிகளுக்கான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) 26, வணிக வரித்துறை உதவி இயக்குனர் 25, கூட்டுறவுத்துறை பதிவாளர் 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 7, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி 3 பதவிகள் என 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி உள்பட சில முக்கியமான பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 5856பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 3,239 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 2,617 பேர் தேர்வு எழுத வரவில்லை. 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.