என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
- மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றத்தை ரத்து செய்து பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- மதுபான கடைகளை தமிழக அரசு குறைக்கும் என்று அறிவித்த நிலையில் இங்கு மதுபான கடைகளை திறப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை சேவூர் அடுத்த பந்தம்பாளையம் பகுதி கிராம பொதுமக்கள், பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றம் வர இருப்பதாக அறிகிறோம். இப்பகுதியில் ஏராளமான கூலித்தொழிலாளிகளும், பெண்களும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.
மேலும் இந்த இடத்தின் அருகில் அங்கீகாரம் பெற்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில் புதிதாக வீடுகட்டி குடும்பத்தோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கருவலூர்-சேவூர் செல்லும் சாலையில் அமைந்து இருப்பதால் பெண்களும்,குழந்தைகளும் இந்த வழியே பாதுகாப்பாக செல்ல இயலாத நிலை ஏற்படும். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து அங்கு மக்கள் வசிக்க இயலாத நிலை ஏற்படும். எனவே இங்கு அமைய இருக்கும் மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றத்தை ரத்து செய்து பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மதுபான கடைகளை தமிழக அரசு குறைக்கும் என்று அறிவித்த நிலையில் இங்கு மதுபான கடைகளை திறப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.