search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
    X

    சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது

    • கைது செய்யப்பட்ட இளங்கோ, மகேந்திரன் மீது மூலக்கரைப்பட்டி, முன்னீர்பள்ளம் மற்றும் பெருமாள்புரம், களக்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளது.
    • 3 பேர் வழிப்பறி செய்து வரும் நகைகளை புரோக்கர்களான மூலக்கரைப்பட்டியை சேர்ந்த தளவாய், சங்கர் ஆகியோரிடம் கொடுத்து விற்பனை.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த நாங்குநேரி அருகே முதலைகுளத்தை சேர்ந்த வாலிபரின் செல்போனில் ஒரு செயலி மூலமாக லிங்க் வந்துள்ளது.

    அதனை அவர் கிளிக் செய்து பார்த்தபோது அவரது பெயர் விபரங்கள் கேட்கவே, அவரும் அதனை பதிவு செய்துள்ளார். அந்த செயலியில் ஏராளமான வாலிபர்கள் இணைந்திருந்த நிலையில் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்(வயது 19) என்பவர் முதலைகுளம் வாலிபரை செயலி மூலமாக அழைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் பானான்குளம் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவரை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு மகேந்திரன் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மகேந்திரனின் சகோதரரான இளங்கோ(22) தனது நண்பரான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பொன்னுமணி(25) என்பவருடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து உதைத்தனர்.

    பின்னர் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்தனர். இதுதொடர்பாக வாலிபர் அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, மகேந்திரன் மற்றும் பொன்னுமணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட இளங்கோ, மகேந்திரன் மீது மூலக்கரைப்பட்டி, முன்னீர்பள்ளம் மற்றும் பெருமாள்புரம், களக்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளது. மேலும் பொன்னுமணி மீது கயத்தாறு, தாழையூத்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் ஒரு கும்பலாக செயல்பட்டு, செல்போன் செயலி மூலமாக வாலிபர்களின் ஆசையை தூண்டி அவர்களை தனியாக வரவழைத்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை வழிப்பறி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்ற விபரமும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் வழிப்பறி செய்து வரும் நகைகளை புரோக்கர்களான மூலக்கரைப்பட்டியை சேர்ந்த தளவாய்(48), மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த சங்கர்(45) ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து 5 பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×