search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியிலும் தோஷம் கழிப்பதாக கைவரிசை- கைதான சாமியார் பற்றி திடுக் தகவல்
    X

    நெல்லை, தூத்துக்குடியிலும் தோஷம் கழிப்பதாக கைவரிசை- கைதான சாமியார் பற்றி திடுக் தகவல்

    • போலீசார் கீழக்கரைக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்தனர்.
    • விசாரணையில் சூர்யா குமரி மாவட்டத்தில் மேலும் சிலரிடம் பரிகாரம் செய்வதாக கூறி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட் டூர்ணிமடம் அருகே நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி லட்சுமி. இவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார்.

    இதையடுத்து இவர் வீட்டிற்கு வந்த சாமியார், வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை சரி செய்ய ரூ.14 ஆயிரம் தரவேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து கிருஷ்ணன் ரூ.14 ஆயிரம் கொடுத்துள்ளார்.பின்னர் அந்த சாமியார் கிருஷ்ணனிடம் சொம்பில் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார்.

    கிருஷ்ணன் சொம்பில் தண்ணீர் கொண்டு கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கிருஷ்ணனிடம் சொம்பில் இருந்த தண்ணீரை கொடுத்து வீடு முழுவதும் தெளித்து வருமாறு சாமியார் தெரிவித்தார்.கிருஷ்ணன் தண்ணீரை தெளித்து விட்டு வந்து பார்த்தபோது சாமியாரை காணவில்லை.ரூ.14 ஆயிரம் பணத்துடன் அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சாமியாரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது

    இதில் கிருஷ்ணனிடம் கைவரிசை காட்டியது நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த சூர்யா (45) என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கீழக்கரைக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சூர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சூர்யா குமரி மாவட்டத்தில் மேலும் சிலரிடம் பரிகாரம் செய்வதாக கூறி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல இடங்களில் இதே போல் கைவரிசை காட்டி இருப்பதாக கூறியுள்ளார். போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடமாக சென்று கைவரிசை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். தினமும் ரூ.6 ஆயிரம் வரை பணம் கிடைத்துள்ளதாக சூர்யா கூறினார்.

    இதை தொடர்ந்து போலீசார் சூர்யாவை கோர்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×