search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம்- 25 பவுன் நகை கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம்- 25 பவுன் நகை கொள்ளை

    • குமார் வீட்டை பூட்டி விட்டு பூந்தமல்லி சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம், எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு யோகேஷ், மனோஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் யோகேஷ் பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசு தேர்வு என்பதால் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்காக குமார் பூந்தமல்லியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து இருந்தார்.

    அந்த வீட்டில் குடியேற, பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்காக குமார் போளிவாக்கத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு நேற்று குடும்பத்துடன் சென்றார்.

    இந்தநிலையில் இன்று காலை குமாரின் சகோதரர் ஒருவர் போளிவாக்கம் பகுதி வழியாக சென்றார். அப்போது குமாரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பூந்தமல்லியில் உள்ள குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.9 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அள்ளி சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மோப்பநாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    குமார் வீட்டை பூட்டி விட்டு பூந்தமல்லி சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் குமாரை பற்றி நன்கு அறிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×