search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
    X

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

    • பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான தேரடியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாலை ஓரத்தில் நின்று வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு(எண்55) அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தேரடி அருகே வந்தபோது பஸ் திரும்ப வழி இல்லாமல் சாலையோரத்தில் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் கட்டிட தொழிலாளர்களிடம் வாக்கு வாதத்தில ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் டிரைவர் பஸ்சை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

    இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர்கள் பஸ் நிலையத்துக்குள் நின்ற அரசு பஸ்டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×