search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி மாமியார்-மருமகளிடம் நகைகள் நூதன திருட்டு
    X

    திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி மாமியார்-மருமகளிடம் நகைகள் நூதன திருட்டு

    • செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது மருமகள் பிருந்தாவுடன் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள், பஞ்ச வர்ணம் மற்றும் அவரது மருமகளிடம் காவி உடை அணிந்த 2 பேர் இங்கு வந்தார்களா? என கேட்டு பேச்சு கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    அப்போது அந்த பெண்கள், தங்களது உறவினர் மகளுக்கு இருந்த உடல் பிரச்சினையை காவி உடை அணிந்து வந்த நபர்கள் தீர்த்து வைத்ததாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில் மறுநாள் பஞ்சவர்ணமும், அவரது மருமகளும் வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது, முந்தைய தினம் வந்த பெண்கள் கூறியதுபோல் காவி உடை அணிந்து 2 நபர்கள் வந்தனர். அவர்களை பார்த்த பஞ்சவர்ணம், உங்களை பற்றி 2 பெண்கள் கூறியதாக அந்த நபர்களுடன் பேசி உள்ளார்.

    அப்போது அந்த நபர்கள், தங்களின் கையை பார்த்து உங்களுக்குள்ள பிரச்சினையை கண்டறிந்து அதற்கு பரிகாரம் செய்து தீர்த்து வைப்போம் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்ச வர்ணம், தனது கையை அந்த நபர்களிடம் காட்டி உள்ளார்.

    அப்போது அந்த நபர்கள் உங்களுக்கு உடல் சூடு அதிகமாக இருப்பதாக கூறி அதனை போக்க சாப்பிடு மாறு ஒரு மருந்தை கொடுத்துள்ளனர். இதையடுத்து பஞ்சவர்ணத்தின் மருமகள் பிருந்தாவின் கையை பார்த்து, பொன் (தங்க நகை) தோஷம் இருப்பதாக கூறி உள்ளனர்.

    அதனை போக்குவதற்கு வீட்டில் உள்ள நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்சவர்ணம் வீட்டில் இருந்த சில தங்க நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் பரிகார பூஜை செய்ய கேட்ட ரூ.5,500 பணத்தையும் அந்த நபர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

    தங்க நகைகள் மற்றும் பணத்தை வாங்கி கொண்ட அந்த மர்ம நபர்கள், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நகைகளை கொண்டு சென்று பூஜை செய்து எடுத்து வருவதாக சென்றுள்ளனர். மேலும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் நகையை வாங்கி சென்ற நபர்கள் வராததால், அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் வெகு நேரமாகியும் அந்த நபர்கள் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பஞ்ச வர்ணம், மீண்டும் போன் செய்தார். ஆனால் அந்த நபர்களின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியதை அறிந்த பஞ்சவர்ணம், அதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×