search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழடியில் நடந்து வரும் 9-ம் கட்ட அகழாய்வு பணியில் மிகப்பெரிய தரைதளம் கண்டுபிடிப்பு
    X

    கோப்பு படம்

    கீழடியில் நடந்து வரும் 9-ம் கட்ட அகழாய்வு பணியில் மிகப்பெரிய தரைதளம் கண்டுபிடிப்பு

    • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன
    • தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் முடிவ டைந்துள்ளன. இதற்காக கீழடி கிராமத்தில் 48-க்கும் மேற்பட்ட சதுர குழிகள் வெட்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பழமையான உறை கிணறுகள், செங்கல் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் பார்வையிட பலகோடி ரூபாய் மதிப்பில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வின் மூலம் கீழடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டில் இருந்து 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் கீழடி நாகரீகத்துக்கும், சிந்துவெளி நாகரீகத்துக்கும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டன.

    தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் வற்புறுத்தலின்படி தற்போது கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொல்லியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், ஆய்வாளர் அஜய், காவ்யா ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த அகழாய்வு 22 செண்டு நிலத்தில் முதற்கட்டமாக தொடங்கியுள்ளது.

    வீரணன் என்பவரது நிலத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்தன. 1 ½ அடி ஆழத்தில் தோண்டியபோது வலுவலுப்பான பச்சை நிறத்திலான மிகப்பெரிய தரை தளம் காணப்பட்டது. ஒழுங்கற்று உள்ள இந்த தரை தளம் சுடுமண் செங்கற்களால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்களிடையே மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூடுதலாக குறிப்பிட்ட பகுதிகளில் தோண்டி ஆய்வுப்பணிகள் நடத்தினால் மேலும் அரிய வகை பொருட்கள், தமிழர் நாகரீகத்தின் தகவல்கள் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர்.

    Next Story
    ×