தச்சநல்லூர் அருகே நள்ளிரவில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நள்ளிரவில் அவர்கள் அனைவரும் திரண்டு சென்று நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் போராடி மின்பழுதை சரிசெய்ய முயன்றனர்.
தச்சநல்லூர் அருகே நள்ளிரவில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த மேலக்கரையில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக மேலக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பரமாரிப்பு காரணமாக அந்த பகுதியில் பகலில் மின்சாரம் இல்லை. மாலை 5 மணிக்கு மேல் மின்சாரம் வந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். நள்ளிரவில் அவர்கள் அனைவரும் திரண்டு சென்று நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், கனரக வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு உதவி பொறியாளர் சங்கரன் தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள், மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் இன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டோம். குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உள்ளது. மின்துறை அதிகாரிகள் கொடுத்த உறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற மின்வெட்டு இருந்தால் இதைவிட தீவிரமாக போராடுவோம் என்றனர்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நேற்று தச்சநல்லூர் மேலக்கரை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று பகல் முழுவதும் மின்வினியோகம் இல்லை. தொடர்ந்து மாலை 5 மணி வரை மின் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டனர். அதன்பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் திடீரென டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது. எனினும் உடனடியாக அங்கு ஊழியர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் போராடி மின்பழுதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அது முடியாத காரணத்தினால், மாற்றுப்பாதையில் மின்சாரம் வழங்கி உள்ளோம் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com