குளித்தலை அருகே நள்ளிரவில் தீவிபத்து- டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பல லட்சம் துணிகள் எரிந்து சேதம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்தில் தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி.
தீ விபத்தில் தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி.
Published on

குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதியான பண்ணப்பட்டி ஊராட்சியில் பி.உடையாப்பட்டியில் பல ஆண்டுகளாக தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் சிமெண்டு கூரை வேயப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில் பண்ணப்பட்டியை சேர்ந்த சதாசிவம் என்பவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதில் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு சுமார் 45-க்கும் மேற்பட்ட தையல் எந்திரங்களை வைத்து கரூரிலிருந்து துணிகளை எடுத்து வந்து தைத்து அனுப்புவது வழக்கமான பணியாக நடைபெற்று வந்தது.

சமையலர்கள் பயன்படுத்தும் ஏப்ரன், திரைச்சீலைகள், தலையணை உறைகள், முக கவசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உற்பத்தி செய்யப்படும் துணிகளை வாரந்தோறும் சனிக்கிழமை எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த 3 நாட்களாக தயாரான துணிகள் பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நள்ளிரவில் அந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து அளவுக்கு அதிகமாக புகை வெளியேறியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் முசிறி, கரூர் தீயணைப்பு துறையினர் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்ததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த தையல் எந்திரங்கள், ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான ஆடைகள், துணிகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தோகைமலை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி மற்றும் கரூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. தரகம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் இருந்திருந்தால் தீவிபத்தின் சேதத்தை குறைக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறி தரகம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com