

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தான் பிளஸ்-2க்கு பிறகு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை மன்னார் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மாணவியை மீட்டு உடனே சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவி காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மன்னார் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்தும் படிக்க கூடாது என்று தந்தை மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.