பர்கூர் பகுதியில் வனப்பகுதி ரோட்டில் உலா வந்த ஒற்றை யானை- போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது. யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
பர்கூர் பகுதியில் வனப்பகுதி ரோட்டில் உலா வந்த ஒற்றை யானை- போக்குவரத்து பாதிப்பு
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, யானைகள், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. மேலும் வனப்பகுதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளுக்குள் குட்டைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது

இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது. அந்த யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மற்ற வாகன ஓட்டிகளும் யானை ரோட்டில் நிற்பதை கண்டு மிகுந்த அச்சத்தோடு செல்ல முடியாமல் அங்கேயே நின்றனர். இதனால் வாகனங்கள் ரோட்டோரம் அணி வகுத்து நின்றன.

நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானை அதன் பிறகு அங்கு இருந்து வனப்பகுதிகளுக்குள் சென்றது. அதன் பின்பு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com