

மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வலசை துறையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் முருகன் (வயது 48). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதே தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போடி அம்மாபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த தனது உறவினரான ஜெகதீஸ்வரன் (32) என்பவரை முருகன் வேலைக்கு சேர்த்து விட்டார்.
அவரும் தோட்டத்திலேயே தங்கி பராமரிப்பு மற்றும கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். இருவரும் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அடிக்கடி இரவில் மது அருந்தி வந்துள்ளனர். ஜெகதீஸ்வரனின் வேலை தோட்ட உரிமையாளருக்கு பிடித்து விடவே அவரை குடும்பத்துடன் இங்கு வந்து விடுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் முருகனுக்கு ஆத்திரம் எற்பட்டது. நாம் வேலைக்கு சேர்த்து விட்ட ஜெகதீஸ்வரன் உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கி விட்டானே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று இரவு தோட்டத்தில் 2 பேரும் மது குடித்து கொண்டிருந்தபோது இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகன் அரிவாளால் ஜெகதீஸ்வரனை வெட்ட முயன்றார். இதனால் தானும் அரிவாளால் முருகனை ஜெகதீஸ்வரன் தாக்கினார்.
இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்தபோது தனது உரிமையாளருக்கு செல்போன் மூலம் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் இருவரும் மாறி மாறி வெட்டியதில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரை அங்குள்ள ஓடையில் இழுத்துச் சென்று தள்ளி விட்டு ஜெகதீசன் தப்பி ஓட முயன்றார். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த தோட்ட உரிமையாளர் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட முருகனின் உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தோட்டத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் முருகனை ஜெகதீஸ்வரன் தாக்கும் காட்சிகளும் அவரை இழுத்துச் சென்று ஓடையில் தள்ளிய காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரனை கைது செய்த போலீசார் அங்கிருந்த 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.