search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் செயல்படுத்தி உள்ளது.
    • சாலை மறியல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

    சாயல்குடி:

    வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரத்தில் பெரும்பாலான கிராமங்களில் தற்போது வரை குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது.

    குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் செயல்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஓரளவு தண்ணீர் பிரச்சினை குறைந்துள்ளது.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சில கிராமங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை அங்கு குடிநீர் சப்ளை நடைபெறவில்லை.

    இதனால் அந்த கிராம மக்கள் கூட்டுக் குடிநீர் எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

    சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர். பட்டிணம் கிராமத்திலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் மாதங்கள் பல ஆகியும் தற்போது வரை இந்த திட்டத்தை செயல் படுத்தவில்லை.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் எம்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடத்து தண்ணீருக்காக பல கிலோமீட்டர் செல்லும் நிலை உள்ளது. மேலும் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடமும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்தும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று காலை எம்.ஆர்.பட்டிணத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஒப்பிலான்-வாலிநோக்கம் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் 4 மணிநேரம் நீடித்தது. இதன் காரணமாக ஒப்பிலான்-வாலிநோக்கம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சாலை மறியல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

    Next Story
    ×