என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் மனைவியுடன் மோட்டர் சைக்கிளில் சென்ற தொழில் அதிபரை தாக்கி 8 கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் பணம் பறித்து சென்ற கும்பல்
- வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.
- சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் சிவதாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் சிவதாபுரத்தில் வெள்ளி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு சுரேஷ், அவரது மனைவி விசாலாட்சியும், வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் 8 கிலோ வெள்ளியை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், காட்டூரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.
மேலும் சுரேஷ் மற்றும் விசாலாட்சியை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்ததில் சுரேஷ் படுகாயம் அடைந்தார்.
பின்னர் சுரேஷின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் மாநகர தெற்கு துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற துணை கமிஷனர் லாவண்யா சுரேஷிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் 4 கொள்ளை கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.






