search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து சீல் வைத்த அதிகாரிகள்.

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல்

    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட முறையீட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சண்முகசுந்தரம் என்பவரது தலைமையில் நேற்று இரவு 11 மணியளவில் வீரப்பம்பாளையம் என்ற பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை நடத்திய போது அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது. காரில் இருந்தவரிடம் விசாரித்த போது தனது பெயர் முகமது தவுபீக் என்றும் கேரளாவில் இருந்து ஜவுளி வாங்க வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் பணத்துக்கு உரிய அவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நிலைக்குழுவினர் ருத்ரமூர்த்தி என்பவரது தலைமையில் எல்லை மாரியம்மன் கோவில் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ரூ. 1 லட்சத்து 200 பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. பணத்தை கொண்டு வந்தவரிடம் விசாரித்த போது அவர் ஆந்திராவை சேர்ந்த ருத்ரசீனிவாசன் என்பதும் ஜவுளி வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×