கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.போலீசார் வருமானவரித்துறை அதிகாரியிடம் பணம் கைப்பற்றியது தொடர்பாக தகவல் தெரிவித்தனர்.
கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்
Published on

கடலூர்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மாநில எல்லைப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான முறையில் தகவல் கூறவில்லை . இதனைத் தொடர்ந்து பணம் மற்றும் அந்த நபரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் சென்னையை சேர்ந்த ராஜா (வயது 27) என்பதும் அவர் பையில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு நபர் வீடு கட்டி வரும் நிலையில் அவருக்கு இந்த 10 லட்சம் ரூபாய் பணம் வழங்குவதற்காக கொண்டு வந்தேன் என ராஜா கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரியிடம் பணம் கைப்பற்றியது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com