கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

அதன்படி கடந்த நவம்பர் 27-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 800 கன அடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீத்ததால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி கடந்த மாதம் 8-ந்தேதி முதல் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தக் கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை குறைத்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 225 கன அடி வீதம் வருகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34.60 அடியாக பதிவானது. 3.015 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com