ராமநாதபுரத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்த 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க.தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமறைவாக உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், சண்முகநாதன் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்த 2 பேர் கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே சமீபத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளாக இருந்தவர்கள் அனைவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் கட்சி பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டார்.

நேற்று மாலை ராமநாதபுரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தரணி முருகேசன் இரவு 8 மணியளவில் கேணிக்கரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு ஆளுநர் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தரணி முருகேசன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் வெளியே நின்று கொண்டு அவதூறாக பேசியுள்ளனர். மேலும் தரணி முருகேசன் எங்கே? என கேட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் 2 பேர் வந்து பிரச்சினை செய்வதை பார்த்த வீட்டு வேலைக்காரர் கணேசன் அவர்கள் யார்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் தரக்குறைவாக பேசி கணேசனை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அங்கு நின்றிருந்த பா.ஜ.க.வினர் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றனர். இருப்பினும் கட்சியினர் சமயோஜிதமாக செயல்பட்டு ஆயுதங்களுடன் வந்த 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர், பின்னர் 2 பேரும் கேணிக்கரை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மோகன் (வயது34), புது வண்ணாரபேட்டையை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. இவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், பா.ஜ.க. பிரமுகர்கள் விக்னேஷ்வரன், சண்முகநாதன், பாலமுருகன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கொலை செய்யும் நோக்கத்தோடு ஆயுதங்களுடன் வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மோகன், சுரேஷ் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், சண்முகநாதன் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு, ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க.தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com