search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசமான வானிலையால் ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் நிகழ்ச்சிகள் ரத்து
    X

    மோசமான வானிலையால் ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் நிகழ்ச்சிகள் ரத்து

    • நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.
    • மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.

    டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார்.

    தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, கோவிலில் உள்ள சிற்பங்களையும் வியந்து பார்த்தார்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கோவைக்கு புறப்பட்டார்.

    நேற்று மாலை 3.10 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வந்தார். அங்கும் அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் காரில் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

    அங்குள்ள லிங்க பைரவி தேவி, நந்தி சிலையை வழிபட்டார். தொடர்ந்து ஆதியோகி சிலை முன்பு நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஜனாதிபதி மீண்டும் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு அங்கு தங்கினார்.

    இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.

    மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நண்பகல் 12 மணியளவில் கோவை விமானநிலையத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×