search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீவைப்பு- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினரிடம் விடிய விடிய விசாரணை
    X
    புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள்.

    பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீவைப்பு- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினரிடம் விடிய விடிய விசாரணை

    • டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். பா.ஜ.க பிரமுகர். இவர் புஞ்சை புளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி இவருக்கு சொந்தமான கார் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மர்மநபர்கள் இவரது காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்து அழைக்கப்பட்ட செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் காருக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கமருதீன் (31) என்பவரை புளியம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் பரவியதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திரண்டனர். தங்கள் அமைப்பு உறுப்பினரை எவ்வித ஆதாரமும் இன்றி பிடித்து போலீசார் விசாரிப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று இரவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட திரண்டு வந்தனர்.

    அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் நிர்வாகிகள் எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை எந்தவித ஆதாரமும் இன்றி போலீசார் பிடித்து விசாரணைக்காக வைத்துள்ளனர்.

    அவரை உடனடியாக வெளியே விட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அதற்கு போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என்றனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே கமருதீனிடம் பு.புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×