அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கழுத்தை நெரித்து கொலை?

சென்னை அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

அண்ணாநகர்:

அண்ணாநகர், சாந்தி காலனி, 11-வது பிரதான சாலையில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

இங்கு நேபாளத்தைச் சேர்ந்த பிரேம் (வயது 25) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பில் மொட்டை மாடிக்கு சென்ற பிரேம் நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அங்கு சென்று பார்த்த போது 2-வது தளத்தில் பிரேம் மர்மமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிரேமின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடயம் காணப்பட்டது. மேலும் கழுத்தில் நகக்கீரல்கள் உள்ளன.

எனவே பிரேமை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலைசெய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நேற்று இரவு பிரேம் நண்பர்கள் சிலருடன் குடியிருப்பின் மாடிக்கு சென்று மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து பிரேமுடன் சென்ற அவரது நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com