

மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்து வந்தார்.
அப்போது தருமபுரி அருேக ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் எப்படியாவது எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடம் இருந்து புஸ்பலிங்கம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.24.80 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இது பற்றி அவரிடம் ராமச்சந்திரன் நான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து ராமசந்திரன் கல்லாவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவரை கைது செய்தனர். கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.