search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே மேலும் ஒரு கன்றுக்குட்டியை இழுத்துச் சென்ற சிறுத்தை புலி
    X

    பரமத்திவேலூர் அருகே மேலும் ஒரு கன்றுக்குட்டியை இழுத்துச் சென்ற சிறுத்தை புலி

    • கன்று குட்டியை தாக்கி கொன்று 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது சிறுத்தை புலி தான் என கண்டுபிடிக்கப்பட்டது.
    • கன்றுக்குட்டி இறந்து கிடக்கும் இடத்திற்கு மனிதர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி ரங்கநாதபுரம் தேட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்( வயது 52). இவருக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இவரது தோட்டத்தில் உள்ள தொழுவத்தில் 5 மாடுகள், 6 கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் இவர் மட்டும் இரவு மாடுகளுக்கு பாதுகாப்பாக தங்குவது வழக்கம். இந்நிலையில் காலை மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக சென்று பார்த்தபோது, அங்கு கட்டி இருந்த ஒரு கன்று குட்டியை காணவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் தேடிய போது, அவரது தோட்டத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில், கன்று குட்டி இறந்து கிடந்தது.

    இதைப் பார்த்த சீனிவாசன் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனவர் சீனிவாசன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கன்று குட்டியை தாக்கி கொன்று 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது சிறுத்தை புலி தான் என கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சிறுத்தை புலி அந்த கன்று குட்டியை சிறிதளவு சாப்பிட்டுவிட்டு செடி, கொடிகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளது.

    எனவே சிறுத்தை புலி மீண்டும் தனது இரையை எடுக்க அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக கருதிய வனத்துறையினர், கன்றுக்குட்டி இறந்து கிடக்கும் இடத்திற்கு மனிதர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இறந்து கிடக்கும் கன்றுக்குட்டி மீது மனித வாடை அடிக்கும்பட்சத்தில், சிறுத்தை புலி திரும்ப அந்த இடத்திற்கு வராது.

    இதனால் கன்றுக்குட்டி அருகே யாரும் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. சிறுத்தை புலியை பிடிப்பதற்காக, உடனடியாக கூண்டு வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் வைத்துள்ளனர்.

    மேலும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு சிறுத்தை புலி தண்ணீர் குடிப்பதற்கு கண்டிப்பாக வரும் என்பதால் அந்தப் பகுதிகளின் அருகே புதிதாக கேமிராக்கள் அமைக்க உள்ளனர்.

    Next Story
    ×