பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி- கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

மது போதையில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரெயில் தடம் புரளுமா? அல்லது கவிழுமா? என்ற சோதனை செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூர்யா
சூர்யா
Published on

நாகர்கோவில்:

குழித்துறை இரணியல் இடையே பாலோடு பகுதியில் கடந்த 19-ந்தேதி ரெயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது.

பாறாங்கற்கள் மீது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ரெயில் தப்பியது. ரெயில் தண்டவாளத்தில் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடத்தியது யார்? என்பது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ரெயில்வே டி.எஸ்.பி. சுதிர்லால், இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றது ஆலஞ்சி பாறவிளை பகுதியை சேர்ந்த லெனின் என்ற சூர்யா (வயது 24) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் ரெயில்வே தண்டவாளத்தில் மதுபோதையில் பாறாங்கற்களை வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நேற்று சூர்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா கூறுகையில், ரெயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தால் ரெயில் தடம் புரளுமா? அல்லது கவிழுமா? என்ற சோதனையை மேற்கொள்ள தண்டவாளத்தில் பாறாங்கற்களை தூக்கி வைத்தேன். அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயங்கர சத்தத்துடன் பாறாங்கற்கள் மீது மோதியது. ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

அதை வீடியோவில் பதிவு செய்தேன். பின்னர் வீட்டில் சென்று தூங்கி விட்டேன். காலையில் போலீசார் என்னை பிடித்து விட்டனர் என்றார். கைது செய்யப்பட்ட சூர்யாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் ரெயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரயில்வே தண்டவாளத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த டி.எஸ்.பி. சுதிர்லால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரெயில் தண்டவாளங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தபட்டுள்ளது. நாகர்கோவில் இருந்து குழித்துறை வரை ஒரு குழுவினரும் குழித்தறையில் இருந்து நாகர்கோவிலுக்கு மற்றொரு குழுவினரும் நடந்தே சென்று ரோந்து பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தினமும் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்றிரவு போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com