search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த கரடி
    X

    ஊட்டியில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த கரடி

    • போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள் சாய்த்து போட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் என்பதால் அங்கு காட்டு யானைகள், கரடி, காட்டு மாடுகள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

    அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் கரடி, யானை, புலி, மான் உள்ளிட்டவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவார பகுதிகளில் சுற்றிதிரிந்து வருகின்றன. மேலும் ஒருசில விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அங்குள்ள வீடுகளை உடைத்து சமையலறையில் உள்ள பொருட்களை தின்றும், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கரடிகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து கடைகளை உடைத்து உணவுப்பொருட்களை சூறையாடி செல்வது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நேற்று நள்ளிரவு ஊட்டி நகருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள ஸ்டேட் வங்கி பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ஊட்டி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள்-சேரை சாய்த்து போட்டது. ஊட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் ரோந்து பணிக்கு சென்றிருந்ததால் அங்கு அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையே ரோந்துப்பணி முடிந்து போலீசார் மீண்டும் காவல் நிலையம் திரும்பினர். அப்போது போலீஸ் நிலையத்துக்குள் ஒரு கரடி சுற்றி திரிவது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

    அப்போது எதேச்சையாக போலீசாரை கண்டதும் போலீஸ் நிலையத்தில் இருந்த கரடி திடீரென தப்பியோடியது. பின்னர் வந்தவழியாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. போலீஸ் நிலையத்துக்குள் கரடி புகுந்து உலாவரும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூகவலை தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஊட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், அல்லது அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×